1. அவர் தம் சீடர் பன்னிருவரையும் அழைத்து நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும், அசுத்த ஆவிகளை ஓட்டவும் அவற்றின்மேல் அதிகாரம் அவர்களுக்கு அளித்தார்.
2. பன்னிரு அப்போஸ்தலர்களின் பெயர்கள் பின்வருமாறு: முதல்வர் இராயப்பர் என்னும் சீமோன், அவர் சகோதரர் பெலவேந்திரர், செபெதேயுவின் மகன் யாகப்பர், அவர் சகோதரர் அருளப்பர்,
3. பிலிப்பு, பார்த்தொலொமேயு, தோமையார், ஆயக்கார மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு,
4. கனானேய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.
5. இப்பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில் கற்பித்ததாவது: "புறவினத்தாருடைய நாட்டுக்குச் செல்லவேண்டாம். சமாரியருடைய ஊரில் நுழைய வேண்டாம்.
6. சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே செல்லுங்கள்.
7. சென்று, விண்ணரசு நெருங்கியுள்ளது என்று அறிவியுங்கள்.
8. நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயுற்றோரைச் சுகமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்; இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.
9. பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் மடியில் வைத்துக்கொள்ள வேண்டாம்.
10. பயணத்திற்குப் பையோ இரண்டு உள்ளாடையோ மிதியடிகளோ கோலோ எதுவும் வேண்டாம்; ஏனெனில், வேலையாள் தன் உணவிற்கு உரிமை உடையவன்.
11. "நீங்கள் எந்த நகருக்கு, எந்த ஊருக்குப் போனாலும், அங்கே தகுதியுள்ளவன் யார் என்று கேட்டறிந்து அங்கிருந்து போகும்வரை அவனிடம் தங்கியிருங்கள்.
12. நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, ' உங்களுக்குச் சமாதானம் ' என்று வாழ்த்துங்கள்.
13. அவ்வீடு தகுதியுள்ளதாயின், நீங்கள் கூறும் சமாதானம் அவ்வீட்டின்மேல் இறங்கும். தகுதியற்றதாயின் உங்கள் சமாதானம் உங்களிடமே திரும்பி வரும்.
14. யார் உங்களை ஏற்றுக்கொள்ளாது உங்கள் வார்த்தைகளுக்குச் செவிமடுப்பதில்லையோ, அவர்களுடைய வீட்டில் இருந்தோ, நகரத்தில் இருந்தோ வெளியே போகும்போது காலிலிருந்து தூசியைத் தட்டிவிடுங்கள்.
15. தீர்வைநாளில் சோதோம், கொமோரா நாட்டிற்கு நேரிடுவது அந்த நகரத்திற்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16. "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன். ஆகவே, பாம்புகளைப்போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களாயும் இருங்கள்.
17. "எச்சரிக்கையாயிருங்கள்! மனிதர் உங்களை நீதிமன்றங்களுக்குச் கையளிப்பார்கள். தங்கள் செபக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
18. என்பொருட்டு உங்களை ஆளுநரிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு, அவர்கள்முன்னும் புறவினத்தார்முன்னும் சாட்சியாய் இருப்பீர்கள்.
19. உங்களை இப்படிக் கையளிக்கும்போது என்ன சொல்லுவது, எப்படிச் சொல்லுவது என்று கவலைப்படவேண்டாம். என்ன சொல்லவேண்டுமென்பது அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படும்.
20. ஏனெனில், பேசுவது நீங்கள் அல்லீர்; உங்களில் இருந்து பேசுவது உங்கள் தந்தையின் ஆவியே.
21. "சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைக் கொலைசெய்வார்கள்.
22. என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.
23. அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மனுமகன் வருவதற்குள் நீங்கள் இஸ்ராயேல் நாட்டு ஊர்களையெல்லாம் சுற்றிமுடிக்கமாட்டீர்கள் என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24. "சீடன் குருவுக்கு மேற்பட்டவன் அல்லன். ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்.
25. குருவைப்போல் இருப்பது சீடனுக்குப் போதும்; தலைவனைப்போல் இருப்பது ஊழியனுக்குப் போதும். வீட்டுத் தலைவனையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், வீட்டாரை எவ்வளவு அதிகமாகச் சொல்லமாட்டார்கள்! 26 "எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், வெளிப்படாதபடி மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாதபடி ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.
27. நான் உங்களுக்கு இருளில் கூறுவதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். நீங்கள் காதோடு காதாய்க் கேட்பதைக் கூரைமீதிருந்து அறிவியுங்கள்.
28. "ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.
29. காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா ? எனினும், அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது.
30. உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.
31. எனவே, அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்.
32. "மனிதர்முன்னிலையில் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை நானும் வானகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.
33. மனிதர்முன்னிலையில் என்னை மறுதலிப்பவன் எவனோ, அவனை நானும் வானகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் மறுதலிப்பேன்.
34. "உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்.
35. தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்.
36. தன் வீட்டாரே தனக்குப் பகைவர்.
37. "என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.
38. தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.
39. தன் உயிரைக் கண்டடைந்தவன் அதை இழந்துவிடுவான். எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்.
40. "உங்களை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்.
41. இறைவாக்கினரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்பவன் இறைவாக்கினரின் கைம்மாறு பெறுவான். நீதிமானை நீதிமானாக ஏற்றுக்கொள்பவன் நீதிமானுடைய கைம்மாறு பெறுவான்.
42. "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save