14. அறத்தை அணிந்தேன்; அது என் ஆடையாயிற்று. நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.
15. பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்; காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.
16. ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்; அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக வாதிட்டேன்.
17. கொடியவரின் பற்களை உடைத்தேன்; அவரின் பற்களுக்கு இரையானவரை விடுவித்தேன்.
18. நான் எண்ணினேன்; 'மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன்.
19. என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்; இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.
20. என் புகழ் என்றும் ஓங்கும்; என் வில் வளைதிறன் கொண்டது. '
21. எனக்குச் செவிகொடுக்க மக்கள் காத்திருந்தனர்; என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.
22. என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின.
23. மழைக்கென அவர்கள் எனக்காய்க் காத்திருந்தனர்; மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.
24. நம்பிக்கை இழந்தோரை என் புன்முறவல் தேற்றியது; என் முகப்பொலிவு உரமூட்டியது.
25. நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்; தலைவனாய்த் திகழ்ந்தேன்; வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்; அழுகின்றவர்க்கு ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.